Saturday 21 July 2018

இம்பொட்டண்ட்ஸ் : 2



காலை 10.30 மணி:
மலர் மன்னன் வீடு – குரோம்பேட்டை.

வீட்டில் இருந்த மற்ற மூன்று நண்பர்களும் வேலைக்குக்சென்றுவிட்தால் வீட்டில் மலர் மட்டும் தனிமையில் இருந்தான். முதல் நாள் வாங்கி வைத்திருந்த ஹாலண்டாஸ் பிராண்ட் பிராந்தி பாட்டிலை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டின் கதவை உள் தாழ்ப்பாலிட்டு சாத்திவிட்டு வந்து வீட்டு ஹாலில் தரையில் அமர்ந்தான். பிராந்தி பாட்டில், தண்ணீர் பாட்டில், ஒரு சிறிய ஊருகாய் பாக்கெட் ஒரு கிங்ஸ் சிகரெட் பாக்கெ,ட் அதன் அருகில் ஹாஷ்ட்ரேயாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பழைய எவர்சில்வர் கின்னம். அனைத்தையும் அருகில் வைத்துக் கொண்டு கிளாஸில் பிராந்தியை ஊற்றி தண்ணீரைக் கலந்தான். முகத்தில் சிறிய ஒரு புன்னகைகையை உதிர்த்தபடி தனது ஐஃபோனை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டு தரையில் வைத்துவிட்டு கிளாஸை கைகளில் எடுத்து ஒரு வாய் குடித்தான். முதல் பெக்கை குடித்துவிட்டு ஊறுகாயை கூட எடுத்துக்கொள்ளாமல் ஏதோ நினைப்பில் கால்களை நீட்டி தரையில் படுத்தான். கண்களில் நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. ஐஃபோனில் பாடல் போட்டு அதை ப்ளூடூத் மூலம் அறையின் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த மியூஸிக் சிஸ்டம் ஸ்பீக்கர்களில் ஒலிக்க விட்டான்.

Dont u expect reason open lazer
U try any harder and u only get hurt
Searchin for a light in a closed turner

Runnin runnin runnin will fall in danger
The person is a loser
He is likely he is a loser

 யாரடி நீ மோகினி” திரைப்படத்தின் பாடல் அந்த அறையை அதிரச் செய்தது. பாடல்களைக் கேட்டுக் கொண்டே அடுத்த அறைமணி நேரத்தில் அந்த குவாட்டர் பாட்டிலை முழுமையாக முடித்திருந்தான். மணி 11.00 ஆனது.சுமாரான போதையில் வீட்டில் இருந்து கீழ் இறங்கி தெருவில் நடக்கத் தொடங்கினான்.

எனக்கு உன்கூட கார்ல போகனும் பைக்ல போகனும்னு எல்லாம் ஆசை இல்ல மலர், இப்டி உன் கைய புடிச்சிட்டு எவ்ளோ தூரம் வேணும்னாலும் நடந்து போகனும். அது போதும் எனக்கு” திவ்யாவின் குரல் அவனது காதில் கனீர் கனீரென ஒலித்தது. தனது கண்களை இறுக்கி மூடித் திறந்தான். “விர்ர்ர்” என்ற சத்தத்துடன் ஒரு பைக் அவனைக் கடந்து சென்றது.

கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம இங்க இருக்க வேண்டாம் மலர், உன் ஊர்ல இருக்கும் வீட்ல போய் செட்டில் ஆகிடலாம். அங்கயே ஏதாவது சின்னதா பிஸினெஸ் செஞ்சிக்கலாம், இந்த சிட்டி அட்மாஸ்ஃபியர், மெஷின் லைஃப் இதெல்லாம் போர் அடிச்சிருச்சி, நமக்கே நமக்கான ஒரு லைஃப் வாழனும்டா செல்லம்” மீண்டும் அவளின் வார்த்தைகள் அவனது காதை முட்டியது. மலரின்
கால்கள் வேகமாக நடக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் அவனது கால்கள் அந்த சாலையின் ஓரத்தில் இருக்கும் அப்பகுதி டாஸ்மாக் பாரின் எதிரில் சென்று நின்றது. பனிரெண்டு மணிக்கு திறக்கும் கடைக்காக ஏற்கனவே அங்கு சிலர் காத்திருந்தனர்.

“காலங்காத்தாலயே இவ்ளோ பேருக்கு போதை தேவைப்படுதா? நம்ம மாதிரி இவனுங்களுக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும் போல? அது சரி குடிக்கிறதுக்கு காரணம் தானே தேவை, அது எதுவா இருந்தா என்ன?” என மனதில் நினைத்துக் கொண்டு டாஸ்மாக்கைத் தாண்டி இரண்டு கடைகளுக்கு அப்பால் உள்ள வண்டிக் கடையின் அருகே சென்றான். வியாபாரத்திற்காக மதிய உணவு சமைப்பதில் மும்முரமாக இருந்தார் கடைக்காரர். கடையின் அருகில் மலரை கண்டதும்

“காத்தால போட்ட பூரிசெட் மட்டும்தான் இருக்கிது, வேற ஒண்ணியும் இல்லப்பா. இன்னும் அரை ஹவர்ல லஞ்ச் ரெட் ஆகிடும்” மலரைப் பார்த்ததும் அவனை நோக்கி கூறினார் கடைக்காரர்.

“அதெல்லாம் வேண்டாம்னா, என்னா ப்ராண்ட் இருக்குது?” மெதுவாகக் கேட்டான்.

“ப்ராண்ட் எல்லாம் பாத்துகிட்டா வாங்கி விக்கமுடியுது, 135 ரூவா இருக்குது குடுக்கவா?” சொல்லிவிட்டு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பில் கரண்டியை விட்டு கிண்டிவிட்டார். வெயிலின் தாக்கத்தில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை தன் கைகளால் வழித்து வீசினார் கடைக்காரர்.

“சரி குடுங்கண்ணா” என சொல்லிவிட்டு தன் பர்ஸில் இருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

“இன்னாப்பா ஐநூற நீட்ற? எத்தினி வேணும்?” மகிழ்ச்சியாகக் கேட்டார்.

“2 குடுண்ணா” இப்போதைக்கு போதும்.

டாஸ்மாக் விலையை விட பாட்டிலுக்கு 25 ரூபாய் அதிகம் கொடுத்து இரண்டு குவாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தான். மிண்டும் அதே இடத்தில் அமர்ந்தான். பாடல் பாடத் தொடங்கியது.

வீட்ல அப்பா அம்மாக்கு நம்ம லவ்ல சுத்தமா இஷ்டம் இல்லடா, சூசைட் பண்ணிப்போம்னு மிரட்டுராங்க, என்ன செய்றதுன்னு குழப்பமா இருக்கு. பேசாம டிரெயின்ல விழுந்து செத்துடலாம்னு இருக்கு” காதில் திவ்யாவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்க பாட்டிலைத் திறந்து மட மடவென கிளாஸில் பிராந்தியை ஊற்றினான் மலர்.

அப்பா அம்மா சொல்றாங்கன்னு எல்லாம் நம்ம நினைச்சத மாத்திக்க வேண்டாம். நம்ம கல்யாணம் பண்ணிகிட்டு ஃபாரீன் போய் செட்டில் ஆகிடலாம். இங்க இருந்தா நம்மல நிம்மதியா இருக்க விடமாட்டாங்க போல” லேசான அழுகையுடன் சேர்ந்து ஒலித்தது அவளின் குரல். தனது கண்களை மூடியபடி தரையில் கிடந்த ஊறுகாய் பாக்கெட்டை கையில் எடுத்து வாயில் வைத்து உறிஞ்சி இழுத்தான் மலர்.

மாப்ள வீட்ல இருந்து பேசினாங்கடா. மாப்ள ஓகேதான். சாஃப்ட்வேர்ல இருக்கார், இன்னும் 3 மாசத்துல லண்டன்ல போய் செட்டில் ஆகிடுவாராம். நம்ம விஷயத்தை பற்றி என் அப்பா அவர்கிட்ட எடுத்து சொல்லிட்டாராம். அவர் அதெல்லாம் ஒண்ணும் பிராப்ளம் இல்லைன்னு சொல்லிட்டாராம். அப்பா அம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம் பார்த்தேன்” முதல் பாட்டில் முடிந்து தரையில் சாய்ந்தது. கண்கள் முழுதாக சொறுகியது மலருக்கு. கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். வாயில் சிகரெட்டை வைத்து பற்றவைத்தான். ஐஃபோனில் வாட்ஸப் நோட்டிஃபிகேஷன் வந்தது.

இன்னைக்கு நாளை என்னால மறக்கமுடியாது மலர், ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃபியூச்சர், ஐ வில் ப்ரே டூ காட் ஃபார் யூ” ஆங்கிலமும் தமிழும் கலந்து சிலபல ஸ்மைலிகளுடன் வந்திருந்தது மெஸேஜ்.

“அப்டியே இவ ப்ரே பண்ணினதும் ஆண்டவன் வந்து எனக்கு அள்ளி தள்ளிட்டுத்தான் மறு வேல பார்க்க போறான் பாரு. நான் இருக்க போறதே இன்னும் ஒரு மணிநேரம் தான், வலிக்காம சாவனும்னு வேணும்னா ப்ரே பண்ணிக்கடி என் அன்புக் காதலியே” சத்தமாகப் பேசிக் கொண்டு சிரித்தான் மலர்.

நடப்பவை அனைத்தையும் பார்த்தபடி அந்த அறையின் ஓரமாக அமைதியாக அமர்ந்திருந்தான் இளவரசன் அமடியஸ். அவனது பார்வையின் மூலம் மலரின் வாழ்க்கைப் பாதையை கொஞ்சம் கொஞ்சமாக மனதின் திறையில் கண்டுகொண்டிருந்தான். மலரின் கண்களுக்கு அவன் தெரியவில்லை.

கடைசி பாட்டிலை திறந்தான் மலர். அவனால் நிதானமாக எதையும் செய்யமுடியவில்லை. கைகால்கள் ரைட் லெஃப்ட் என இழுத்தது. தரையில் உட்கார்ந்தபடியே தள்ளாடிக் கொண்டிருந்தான். தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய விஷ பாட்டிலை எடுத்து கிளாஸில் ஊற்றினான். அதைக் கண்ட அமடியஸ் தன் பார்வையால் அந்த கிளாஸை சற்று நகர்த்தினான். கிளாஸில் ஊற்ற வேண்டிய விஷம் தரையில் ஊற்றியது. அதைக் காணாமல் கண்களை மூடிக்கொண்டு கிளாஸை கைகளில் எடுத்து மடக் மடக்கென குடித்துவிட்டான் மலர். தனியாக எதையோ புலம்பிக் கொண்டே அழுதபடி தரையில் சரிந்து விழுந்தான் மலர்.

மலரின் அருகில் வந்து அமர்ந்தான் அமடியஸ். அவனது வாழ்வில் நடந்தவை அனைத்தையும் தன் மனதில் ஒரு குறும்படம் போல் ஓட்டி தெரிந்துகொண்டான்.
தனது பள்ளி கல்லூரி காலங்கள் வரையில் மலர் மன்னன் ஒரு பயமறியானாக இருந்தவன். எதற்காகவும் யாருக்காகவும் பயப்படாமல் வாழ்ந்தவன். அதன் பிறகு வேலை காதல் என வாழ்க்கைப் பாதை மாறிய பிறகு தனக்கான வாழ்வை வாழும் ஒரு சாதாரண மனிதனாக மாறி இன்று தன் இயலாமையை நினைத்து தன்னையே அழித்துக்கொல்லும் நிலைக்கு வந்தவன். போதையில் உறங்கிக் கொண்டிருப்பவனின் தலையை தடவிக் கொடுத்தான் அமடியஸ். தன் நாடு சென்றுகொண்டிருக்கும் அழிவுப் பாதையை தடுக்க முடியாமல் தன்னுடைய இயலாமையை நினைத்து தானும் ஒரு நாள் இதே போன்று தற்கொலை முடிவிற்கு வந்ததை நினைத்து சிரித்துக் கொண்டான்.

கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேல் உறங்கிய மலர் மன்னன் கண்விழித்தான்.
தன் கைகால்களைத் தொட்டு பார்த்துவிட்டு தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான். வேகமாக குளியளறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து அமர்ந்தான். தான் போதையில் கிடந்த போது தன் மனதில் ஏதோ ஒரு வித மாற்றம் நடைபெற்றிருப்பதாக நம்பினான். யாரோ தன்னை புதுவித உலகிற்குக் கொண்டு சென்றது போல் உணர்ந்தான். தனது செல்ஃபோனை எடுத்து அதில் உள்ள மெசேஜ்களைப் படித்தான். ஃப்ரெட்ண்ட்ஸ் குரூப்பில் வந்திருந்த ஃபார்வேடு மெஸேஜுகளுடன் திவ்யாவின் மெஸேஜும் வந்திருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் தனக்கு திருமணம் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. அந்த மெஸேஜை பார்த்து லேசாக சிரித்துவிட்டு அறையின் தரையில் கிடந்த அந்த விஷ பாட்டிலை தன் கைகளில் எடுத்தான். செல்ஃபோனிலிருந்து சிம்கார்டை கழட்டி அந்த பாட்டிலுக்குள் போட்டு அதை தூக்கி தூரமாக வீசினான். தனது செல்ஃபோனை மாஸ்டர் ரீசட் செய்தான். அதை டேபிலில் வைத்துவிட்டு அங்கே கிடந்த நாற்காலியில் அமர்ந்தான் மலர்.

“எல்லா குழப்பமும் போயிடுச்சா இப்போ” வீட்டில் இருந்த இன்னொரு அறையில் இருந்து வெளியே வந்தான் அமடியஸ். அவனைக் கண்டதும் திகைத்துப் போனான் மலர்.

“யாருங்க நீங்க? என் வீட்ல என்ன செய்றீங்க?” பதட்டமாக கேட்டான். அமடியஸின் உருவம் இவனுக்கு எங்கேயோ கண்ட ஒரு நபரைப் போல் தோன்றியது.

“ஹா ஹா... என்னப்பா இப்டி கொஞ்சம் கூட நன்றி இல்லாம நடந்துக்குற? நீ லாஸ்ட் ரவுண்ட் அடிக்கிறப்போ நான் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்த இடத்தில் நீ பிணமாக கிடந்திருப்ப, நான் வந்து அந்த விஷ பாட்டிலை தட்டிவிட்டதால் தான் இப்ப நீ உயிரோட இருக்க.” சொல்லி முடித்துவிட்டு மலர் மன்னனின் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான் அமடியஸ். மலரால் நடப்பது கனவா நனவா என யூகிக்க முடியவில்லை. குழம்பித் தவித்தான். ஆனாலும் அமடியஸை விரட்ட மனது வரவில்லை அவனுக்கு.

“ரொம்ப டேங்ஸ்ங்க... திடீர்னு மனசு கெட்டு போய் அந்த முடிவுக்கு வந்துட்டேன். உலகத்துல நமக்குன்னு யாரும் இல்லையேன்னு நினைக்கிறப்ப தான் எதுக்குடா வாழ்றோம் என்ற என்னம் வந்துடுது” தன் தலையில் கையை வைத்தவாறு பேசினான் மலர்.

“இங்க வந்து 3 நாள் ஆச்சு, இது வரைக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஆளுங்க மனசுல இந்த எண்ணம் இருப்பதை தெரிஞ்சிகிட்டேன். இந்த 3 நாளில் மட்டும் உங்க தமிழ்நாட்டில் இருபத்தைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 29 பேர் தற்கொலை செஞ்சிகிட்டு இருக்காங்க. எல்லோருமே வாழ வேண்டிய வயசு தான். காதல் தோல்வி, கடன் தொல்லை, போதை மயக்கம் என என்னற்ற காரணங்கள். நீயும் காதல் தோல்வியில் தான் தற்கொலை செஞ்சிகிட இருந்தாய் அல்லவா?” அமடியஸ் கேட்டான். அமடியஸின் தேக அமைப்பு அவனின் கண்களில் உள்ள ஈர்க்கும் சக்தி, அவன் பேசும் விதம் அனைத்துமே மலரின் மனதில் ஒருவித புது உணர்வை உண்டாக்கியது. யாரோ இவன் நமக்கான உறவாக வந்தவன் போலிருக்கின்றான். இவனோடு இன்றைய பொழுதை கழித்தால் நம் மனதில் உள்ள வலி நீங்க வாய்ப்பு இருக்கின்றது என நினைத்துக்கொண்டான் மலர்.

“ஆமாம்... இது காதல் தோல்வி என சொல்லமுடியாது. என்னோட தோல்வி என்று வேண்டுமானால் சொல்லலாம். முதலில் நீங்க யார், உங்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்?” தனது குரலை சற்று அழுத்தி கேட்டான் மலர்.

“நான் யார் என்பதை நீ பிறகு தெரிந்துகொள்ளலாம் மலர். இப்போதைக்கு நான் உன் நண்பன். உனக்காக யாருமே இல்லை என்ற எண்ணன் உன் மனதில் இனி வரக்கூடாது. இனி நான் இருக்கின்றேன். என் பேர் அமடியஸ்” என சொல்லிக் கொண்டே மலர் மன்னனை இறுக்கி தழுவிக் கொண்டான். அமடியஸின் அவனை அரவனைத்த அடுத்த நொடி “எதுக்கும் கவலப்படாத மலரூ எல்லாம் ஒரு நாள் மாறிடும்யா” என கூறி தன்னை அணைத்துக்கொள்ளும் தன் தாயின் முகம் மலர் மன்னனின் கண்களில் வந்து சென்றது. அம்மாவின் அரவணைப்பை அந்த நொடியில் அனுபவித்தான் மலர். அவனது கண்கள் நனைந்தது.

“இங்கயே இப்டியே இருக்காதே... வா கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்” அமடியஸ் அழைத்ததும் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்கும் குழந்தை போல அவனைப் பின் தொடர்ந்தான் மலர். இருவரும் அங்கிருந்து கிளம்பினர். பைக்கை மலர் ஓட்டினான்.

சென்னை பெசண்ட் நகர் கடற்கரை: மாலை 6.00 மணி.

அந்தி வானின் வெளிச்சத்தில் கடற்கரையில் மக்கள் கூட்டம் போதும் போதும் என்ற அளவிற்கு இருந்தது, கடற்கரை மணலில் விளையாடி புத்துணர்வு பெற வந்தவர்கள், சர்கரை நோய், இரத்த அழுத்தம் என நோய்களின் கட்டளையினால் நடக்க வந்தவர்கள், குழந்தைகளை விளையாட விட்டு ரசிக்க வந்தவர்கள், காதலிக்க வந்தவர்கள், காமம் தேட வந்தவர்கள், கவலைகளை புதைக்க வந்தவர்கள்... என பலவித மனநிலைகளைக் கொண்ட மனிதக் கூட்டத்தை தாங்கியவாறு அமைதியாக காட்சியளித்தது கடற்கரை. மணலில் அமர்ந்தவாறு கடலினைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் அமடியஸ். அவனது மனதில் அவனது நாட்டைப் பற்றிய எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“என்னாச்சு அமடியஸ். என்னை இங்க அழைச்சிகிட்டு வந்துட்டு நீ அமைதியா இருக்க?” மலர் கேட்டான்.

“ஒன்றுமில்ல மலர், உன் மனசுல இன்னும் உன் காதலை நினைத்து ஏங்குகின்றாயா?” அமடியஸ் கேட்டான்.

“அடச்சை... அப்படி ஒரு எண்ணம் எல்லாம் மதியம் அடிச்ச சரக்கோட முடிஞ்சு போச்சு, யார் யார் தலையில் என்ன எழுதியிருக்கோ அது தானே நடக்கனும். அது அவ்வளவுதான். தற்கொலை செஞ்சிக்க நினைத்தது தான் முட்டாள்தனம். நல்லவேலை நீ வந்து காப்பாத்திட்ட. என் சாவு இப்ப இல்லை போல” சிரித்தான் மலர்

“ஹா…ஹா… உனக்கு இது சாகுற வயசு இல்ல மலர். அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க? அமடியஸ் கேட்டான். மலர் மன்னனின் மனதை முடிந்தவரை தன் பால் ஈர்த்துவிட வேண்டும் என்பதே இவனுக்கான இலக்கு அதை நோக்கி மெது மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தான் அமடியஸ்.

 “இனிமேல் என்ன செய்யலாம் என யோசிச்சிகிட்டு இருக்கேன். இந்த உலகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம் எனக்கு கிடைச்சிருக்கு. யாருக்காகவும் நான் இல்லை, எனக்காகவும் யாரும் இல்லை, இனி நினைத்ததை செஞ்சு பார்த்து வாழ்க்கைய வாழ்ந்து பார்த்துட வேண்டியதுதான்”

தன் தந்தை எதற்காக மலர் மன்னனை தன்னிடம் அறிமுகம் செய்துவைத்தார் என்பதை உணர்ந்தான் அமடியஸ். இவனிடமிருந்து தான் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை தொடங்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்படத் தொடங்கினான்.

“நல்ல முடிவு மலர். இந்த மக்களுக்கு எது மாதிரி சேவைகள் செய்யலாம் என இருக்க?” அமடியஸ் கேட்டான்.

“என்ன அமடியஸ் கிண்டல் செய்றியா? மாசம் 48,000 சம்பாதிக்கிறேன், வேலைய ரிசைன் பண்ணிட்டேன். கொஞ்சம் செட்டில்மெண்ட் அமவுண்ட் வரும். அடுத்து நல்ல வேலைக்கு போவேன். என் செலவு போக மீதம் உள்ளத வச்சி முடியாதவங்களுக்கு ஏதாவது செய்யலாம். எல்லாத்தையும் ஒரே நாளில் முடிவு செஞ்சிட முடியாதுல்ல” சொல்லிவிட்டு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான். மலர் மன்னன் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றமுடையவன். சிகரெட் புகைப்பதைக் கூட மற்றவர் பார்த்து ரசிக்கும் வண்ணம் செய்பவன். அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சாதாரனமாக செல்லை பாக்கெட்டில் எடுத்து பேசிவிட்டு திரும்பி வைப்பதைக் கூட ஸ்டைலாக செய்யக் கூடியவன். நல்ல உயரமான எடுப்பான தோற்றமுடையவனாதலால் பெண்களை எளிதில் கவரக் கூடியவன்.

“சரி சரி டென்ஷன் ஆவாத... கிளம்பலாம்” அமடியஸ் சொன்னதும் மலர் எழுந்தான்.

“இப்பவாவது சொல்லு அமடியஸ், நீ யாருன்னு?” மலர் கேட்டான்.

“சொல்றேன்.., நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு வீட்டுக்கு போக வேண்டாம். பைக்ல எங்கேயாச்சும் தூரமாக பயணிக்கலாமா?” அமடியஸ் கேட்டான். அவன் அவ்வாறு கேட்டதும் முன் பின் தெரியாதவனோடு எங்கே போவது என யோசித்தவன். இனிமேல் நமக்கு என்ன நடந்தால் என்ன? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் என்ற முடிவிற்கு வந்தான் மலர்.

“வழக்கமா லவ் ஃபெயிலியர் ஆனால் பாண்டிச்சேரி தான் போகனும், அதான் உலக வழக்கம், வா நம்ம ரெண்டு பேரும் அங்க போகலாம். உனக்கு தண்ணியடிக்கும் பழக்கம் இருக்குள்ள? மலர் கேட்டான்.

“இந்த வாழ்க்கையை இஷ்டப்படி வாழ்வதே பெரிய போதை தான் அதனால் எக்ஸ்ட்ரா போதை தேவை இல்லைன்னு அதை நான் பழகிக்கல” அமடியஸ் சிரித்தான்.

“தண்ணியடிப்பியான்னு தானே கேட்டேன், அதுக்கே தண்ணியடிச்ச மாதிரி பேசுற” அமடியஸின் தோள்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு இருவரும் பைக்கில் ஏறி கிளம்பினர்.

இரவு நேரத்தில் வெப்பக்காற்று இல்லை, லேசான குளிர் காற்று அடித்துக் கொண்டிருந்தது திருவான்மியூர் தாண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் மலரின் பைக் 100 கிமீ வேகத்தைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களின் மின் விளக்குகல் வரிசையாக வர அதை ரசித்தபடி அமர்ந்திருந்தான் இளவரசன் அமடியஸ். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் தேனீர் பருகினர்.

“மலர் இந்த மாநிலத்தோட அரசியல் நிலைமைய பற்றி நீ என்ன நினைக்கிற?” தனது வேலையை தொடங்கினான் அமடியஸ்.

“பாண்டிச்சேரிக்கு போய் எஞ்சாய் பண்ணலாம்னு சொல்லிட்டு இப்படி பாடாரித்தனமா கேள்வி கேட்குறியே?” சலித்துக் கொண்டான் மலர்.

“சொல்லு மலர்”

“குரங்கு கையில் மாட்டின பூமாலை கூட சில நேரங்களின் குரங்கின் மனநிலையைப் பொருத்து பிய்யாமல் இருந்துடும். ஆனால் இந்த அரசியவாதிங்க கிட்ட மாட்டின மக்களோட நிலைமைய சொல்ல எல்லாம் ஒரு நாள் போதாது அமடியஸ்”

“ஹா... ஹா... ஏன் இந்த அரசியவாதிகள் அவ்ளோ கொடுமைக்காரங்களா?”

“தான் செய்றது கொடுமை என உணராதவைங்கப்பா. ஒன்னா நம்பர் முட்டா பயலுக” டீயை குடித்தான்.

“இவனுங்க முட்டாப் பயலுக என தெரிஞ்சும் ஏன் மக்கள் அவங்கள தேர்ந்தெடுக்குறாய்ங்க?”

“அரசியல்வாதிங்கள விட மோசமானவைங்கப்பா இந்த மக்கள்” சிகரெட்டை பற்ற வைத்தான் மலர்.

“என்னப்பா நீ எல்லாரையும் மோசமானவைங்கன்னு சொல்ற?”

“பின்ன வேற என்ன சொல்றதாம். அரசியல்வாதிங்க என்னதான் கொடுமை செஞ்சு கஷ்டப்படுத்தினாலும் கடைசிநாளில் கையில் காச வாங்கிகிட்டு அவனுங்களுக்கு தான் ஓட்டு போடுவாய்ங. இவனுங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி மொன்ன பயலுக ஆட்சி செய்றது தான் சரி”

“இதை மாற்ற ஏதும் முயற்சி செய்யலையா?”

“முயற்சியா..? அதெல்லாம் நிறைய செஞ்சிருக்காய்ங்க, தமிழ்நாட்ல இருந்த ரெண்டு பெரிய கட்சிகளும் சரி இல்லைன்னு தொடங்கின கட்சிகளையும் அவனுங்க அடிக்கிற கூத்துக்களையும் பார்க்கிறப்போ அய்யய்யொ அதுக்கு இவனுங்க ரெண்டு பேருமே தேவலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துட்டாங்க. இனிமேல் ஒரு புது கட்சி வந்து ஆட்சிய புடிச்சி நல்லாட்சி கொடுக்குறது எல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காத விஷயம் அமடியஸ். இதையெல்லாம் பேசினால் ரத்த கொதிப்பு தான் ஏறும்?”

“உன்கிட்ட ஒண்ணு கேட்டால் பதில் சொல்லுவியா?” அமடியஸ் கேட்டான்

“நீ கேட்குறதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு தானே இருக்கேன்” மலர் சிரித்தான்.

“ஒரு வேளை இந்த மாநிலத்தோட முதலமைச்சரா நீ இருந்தால் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பியா? மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வழி செய்வியா?” பொறுமையாகக் கேட்டான் அமடியஸ்

“என்னடா இப்டி எல்லாம் கேள்வி கேட்குற, சரி விடு காசா பணமா அடிச்சி விட வேண்டியதுதானே. நான் முதலமைச்சராக இருந்தால் நிச்சயமாக என்னால் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும். மக்களை செல்வ செழிப்புடன் சீராக வைத்திருப்பேன். பலநூறு ஆண்டுகளுக்கு என் பெயர் சொல்லும்படி ஒரு சிறப்பான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்” சிகரெட்டை இழுத்தான் மலர். இரவு நேர ஈசிஆர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாகவே காணப்பட்டது.

“அப்படின்னா நீ ஏன் முதலமைச்சர் ஆக கூடாது?” மலரிடம் அழுத்தமாகச் சொன்னான்.

“காமெடி பண்றியா ராஜா? என்னால எங்க கிராமத்துல ஒரு வார்டு மெம்பர் கூட ஆக முடியாது, அதுக்கே எவ்வளவு செலவழிக்கனும் தெரியும்ல” சிரித்தான் மலர்.

“நான் ஒண்ணும் விளையாட்டுத் தனமா கேட்கல மலர், நீ பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறப்போ ஒரு மாநிலத்தில் முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்ததா இல்லையா. அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் உனக்கு பாராட்டு தெரிவித்தார் இல்லையா?”

“ஆமாம்... இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” ஆச்சர்யமாக கேள்வி கேட்டான் மலர்.

“எனக்கு எல்லாம் தெரியும் மலர். நீ ஏன் முதலமைச்சராக முயற்சி செய்ய கூடாது?” தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான்.

“என்னடா என்னமோ இப்பவே பைத்தியமாகிடுன்ற மாதிரி முதலமைச்சர் ஆகிடுன்னு சொல்ற, ஒரு கட்சியில சேர்ந்து அதுல பேர் எடுத்து எம்.எல்.ஏ ஆகி மந்திரி ஆகி அப்புறம் முதல்வர் ஆகி... அய்யோய்யோயோ நினைச்சாலே தலை சுத்துது. வண்டியில் ஏறு எதுன்னாலும் பாண்டிச்சேரி போய் பேசிக்கலாம்” மலர் பைக்கை எடுத்தான், அமடியஸ் அதில் ஏறி அமர்ந்தான்.

இருவரும் பாண்டிச்சேரிக்குச் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தன் கையில் விஷ்கி கிளாஸுடன் அமர்ந்திருந்தான் மலர்.

“என்னா அமடியஸ் கொஞ்சம் லைட்டா அடியேன்” மலர் வற்புறுத்தினான்.

“எனக்கு அதெல்லாம் வேண்டாம். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல். உன்னால் முதலமைச்சர் ஆக முடியுமா?”

“டேய்... என்னடா லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க, என்னால நான் லவ் பண்ணின பொண்ணுக்கு புருஷனாவே ஆக முடியல, இதுல முதலமைச்சர் ஆகனுமாம், வேற ஏதாவது பேசு அமடி”

“ஹேய்... கோவப்படாத நான் சும்மா உன்ன வெறுப்பேத்த தான் அப்டி கேட்டேன். நீ எஞ்சாய் பண்ணு” என சொல்லிவிட்டு மலர் மன்னனின் கிளாஸில் விஷ்கியை ஊற்றினான்.

“எதுக்கு அமடி அப்படி ஒரு விஷயத்தை கேட்ட? முதல்வர் ஆக முடியுமான்னு?” மலர் கேட்டான்.

“அட விடுப்பா. அது தான் நடமுறைக்கு சாத்தியமே இல்லாத விஷயமாச்சே அதைப் பற்றி எதுக்கு பேசிக்கிட்டு?” பேச்சை மாற்றினான் அமடியஸ்

“நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று இங்க எதுவுமே இல்லை. இங்க எதுவும் சாத்தியம் தான்”

“என்னடா சொல்ற? ஒரு தனிமனிதன் நினைத்தால் முதலமைச்சர் ஆகிடலாமா?”

“நிச்சயமா ஆகலாம், அதுக்கு கொஞ்சம் அதிகமான மூளையும் வேண்டும். அளவுக்கு அதிகமான பணமும் வேண்டும்” சற்றே நிதானமாகக் கூறினான் மலர்.

“பணம் இருந்தா சாத்தியமா?” ஆச்சர்யமாக கேட்டான் அமடியஸ்.

“நிச்சயம் சாத்தியம் தான். உடனே முடியாது ஆனால் கொஞ்சம் காலம் எடுக்கும்?”

“இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கும் ஆட்சி இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றது. அடுத்த தேர்தலில் உன்னால் முதல்வர் ஆகிட முடியுமா? சீரியஸா கேட்கல. ஜஸ்ட் ஒரு கற்பனையா சொல்லேன்” மலர் மன்னனின் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்திக் கொண்டே வந்தான் அமடியஸ்.

“இன்னும் இரண்டரை வருடத்தில் ஒரு தனிமனிதனான நான் ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் நின்று போட்டியிட்டு முதலமைச்சர் ஆகனுமா? கேட்க நல்லாத்தான் இருக்கு அதுக்கு எனக்கு கட்டுக்கடங்காத கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு பணம் வேண்டும். அப்படி பணம் கிடைத்தால் நிச்சயமா என்னால முதல்வராகிட முடியும் அமடியஸ்” என சொல்லிவிட்டு கிளாஸில் விஷ்கியை நிறப்பினான் மலர்.

அமடியஸ் அங்கிருந்து எழுந்து பாத்ரூமிற்குள் சென்றான். பாத்ரூம் கதவை தாழிட்டுக் கொண்டு அங்கிருந்து தன் கண்களை மூடி அரசகுருவுடன் பேச முயற்சித்தான். அவனது மனதில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்று

“சொல்லு அமடியஸ்” அரசகுரு அமடியஸின் கண்களில் காட்சியளித்தார்.

“பணம் இருந்தால் சாத்தியம் என சொல்கின்றானே. எனது சக்தியை நான் உபயோகப் படுத்தலாமா குருவே” அமடியஸ் கேட்டான்.

“நிச்சயமாக நீ உபயோகப் படுத்தலாம் அமடியஸ். அவன் மனதில் நீ விதைத்திருக்க்கும் இந்த விதையானது நாளை முதல் முளைக்கத் தொடங்கிவிடும். அதனால் வரப்போகும் அத்துனை இடர்களில் இருந்து நீ அவனை காத்துக் கொள்ள வேண்டும், நம் உலகத்தில் உள்ள மனிதர்களிடம் இருக்கும் அரக்க குணத்தை விட பல மடங்கு அரக்க குணம் உள்ள மனிதர்கள் வாழும் ஒரு இடத்தில் நீ இருக்கின்றாய். ஒவ்வொரு வினாடியும் உங்களை ஆபத்து தொடர்ந்து வரும். உன்னால் முடிந்தவரை நீ போராடி பார்க்கவேண்டும். முடியாத பட்ச்த்தில் உனது தோல்வியை நீ ஒப்புக்கொண்டால் உன்னை காப்பாற்ற அந்த கனமே நான் வருவேன். வெற்றி உனதாகட்டும் அமடியஸ்”

“என் சக்தியை பயன்படுத்தி இப்போதே பணத்தை உருவாக்கிவிடவா” அமடியஸ் கேட்டான்.

“ஹா ஹா ஹா” என பலமாக சிரித்தார் அரசகுரு. “இந்த கேள்வியை நீ மலர் மன்னனிடம் கேள். அதற்கு அவன் தரப்போகும் பதிலை நினைத்துப் பார்த்தேன். அதான் சிரித்துவிட்டேன். விடைபெருகின்றேன் அமடியஸ்” மறைந்தார் அரசகுரு.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் அமடியஸ்.

கட்டிலின் மேல் அமர்ந்திருந்த மலர் மன்னனின் கண்களை உற்று நோக்கினான் அமடியஸ். தான் யார் என்பதை அவனது மூளைக்குள் செலுத்தினான். ஒரு வினாடியில் ப்ரமோதிம்மப்ஸி உலகில் நடந்தவை அனைத்துமே மலர் மன்னனின் கண்களில் காட்சிகளாக ஓடி மறைந்தது. உடலை சிலுப்பிக் கொண்டு எழுந்தான் மலர். தான் கண்ட காட்சிகளை நினைத்து ஆச்சர்யத்தில் உறைந்தான். கடவுள் ஏதோ ஒரு புதுவித விளையாட்டிற்குள் தன்னை நுழைக்கின்றான் என உணர்ந்தவன் தன் எதிரி நின்ற இளவரசன் அமடியஸை பார்த்தான். ஒரு மாவீரனுக்குறிய தோற்றத்துடன் நின்றான் அமடியஸ்.

“அமடி...” என்று கத்திக் கொண்டே அவனைத் தழுவிக் கொண்டான். இருவரும் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

“நீ என்னோட உயிர காப்பாத்திக் கொடுத்துருக்க, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து முயற்சிக்கலாம். இன்னும் இரண்டரை வருடத்தில் இந்த மாநிலத்தில் முதல்வர் நாற்காலியில் நான் அமர்கின்றேன் அதற்கு நீ என்னுடன் மட்டும் இரு” மலர் சொல்லி முடித்ததும்.

 “என்னால் உனக்கு பணம் மட்டும் தான் தர முடியும் மலர். அதைத் தாண்டி என் சக்தியை வேற எதற்கும் பயன்படுத்த முடியாது”

“ஹா ஹா ஹா... என பலமாக சிரித்தான் மலர். உன் சக்தியை வைத்தெல்லாம் இங்க ஒண்ணும் புடுங்க முடியாது. இங்க அரசியல் செய்றவைங்க எல்லாம் ஒண்ணும் சாதாரண ஆட்கள் இல்லை. இந்த உலகத்திலேயே சக்தி வாய்ந்தது பணம் தான். அதை கொடு மத்தத என் கூட உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பார்” என்றான் மலர் மன்னன். அவனது முதத்தில் அப்படி ஒரு பொலிவு காணப்பட்டது. நிச்சயம் போட்டியில் வென்று நமது உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அமடியஸிற்கு.

“இப்போதே சொல்... உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று. உடனே வரவழைத்து தருகின்றேன்” அமடியஸ் கூறினான்.

“அப்டி டக்குன்னு கேட்டால் எப்டி அமடியஸ். எனக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் பணம் வேண்டும், அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும். முக்கியமாக அந்தப் பணம் இந்த நாட்டிற்குள் இருந்து தான் வர வேண்டும். நீயாக உருவாக்கி தர கூடாது. மற்றவர்களிடம் இருந்து எடுத்து தர வேண்டும்.”

“என்ன சொல்கின்றாய், சற்று புரியும்படி சொல்”

“இந்தியா முழுவதும் அரசியல்வாதிகளின் வீட்டிலும் பெரிய பெரிய தொழிலதிபர் வீட்டிலும் சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், என பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் முறைகேடாக பதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை விட்டுடு, தமிழ்நாட்டை தவிற மற்ற எல்லா ஸ்டேட்டிலும் உள்ள பதுக்கப்பட்ட பணத்திலிருந்து மட்டுமே எனக்கு நீ பணம் எடுத்து தர வேண்டும். தமிழ்நாட்டுக்குள்ள யார்கிட்டயும் நீ கை வைக்க கூடாது?”

“ஹா... ஹா... இவ்வளவு தானா, நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். சாதாரண விஷயம் தான் மலர். செய்துவிடுகின்றேன்”

“முக்கியமான விஷயம். அவர்களின் பணம் காணாமல் போகின்றது என்ற விஷயத்தை அவர்கள் எக்காலமும் உணராதவாறு தான் நீ அந்தப் பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும்.” அழுத்தமாகக் கூறினான் மலர்.

“அப்படியே செய்கின்றேன். ஒரே ஒரு டவுட்டுப்பா... ஏன் தமிழ்நாட்ல மட்டும் கைவைக்க வேண்டாம்னு சொல்ற?” சந்தேகமாக கேட்டான் அமடியஸ்

“அந்த பணமெல்லாம் எங்கையும் போயிடாது... அதையெல்லாம் நான் முதலமைச்சர் ஆனதும் எடுத்துப்பேன்... ஹா ஹா ஹா.” சிரித்தபடி கைகளில் இருந்த க்ளாசை உயர்ச்சி “ச்சீர்ஸ்” என்றான்.

தொடரும்

Thursday 19 July 2018

இம்பொட்டண்ட்ஸ் : 1


சென்னை மெரினா கடற்கரை
இன்று இரவு: 9.30 மணி

கடற்கரையில் மனித நடமாட்டம் ஏதும் இல்லை, கடற்கரையில் மின் விளக்குகள் ஏதும் இல்லை, கும்மிருட்டாக இருந்தது. கடலினுள் தூரத்தில் நிற்கும் கப்பல்கள் கடலின் மேல் தீபம் ஏற்றி வைத்தது போல் தோற்றமளித்தது. காற்றின் வேகத்தில் கடலலைகள் கரையை மோதும் சத்தம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது. அமைதியான அந்த கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 600 கிலோமீட்டருக்கு அப்பால் கடலின் நடுவே மிகப்பெரிய நீர்ச்சுழி காணப்பட்டது. பெருங்கடலினை வானத்திலிருந்து காணும் போது அந்த நீர் சுழர்ச்சியானது கடலின் அடிப்பகுதியை நோக்கி செல்லும் ஒரு பாதை போன்று தோற்றமளித்தது.

 “ப்ரமோதிம்மப்ஸி” எனும் பெயர் கொண்ட ஒரு உலகம். கடலுக்கு அடியில் பாதாள லோகத்தில் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற நிலையில் உள்ளவர்களுக்கான உலகம். அவ்வுலகை ஆளும் அரச குடும்பத்தினருக்கு மட்டும் கடவுளின் சக்தியும் அரக்கர்களின் அசுர பலமும் இருக்கும். அவ்வுலகில் வாழும் மக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே அரச குடும்பத்தினர் தங்களின் அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்துவார்கள். அந்த நாட்டின் மன்னர் வயதாகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இறப்பிற்குப் பின்னர் சொர்க்க வாழ்வை அடையவேண்டும் என்றால் தனது அதீத சக்திகளை மக்களுக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்று கனவில் கண்ட விஷயத்தை செயல்படுத்திவிட்டு இறந்தார்.

இறந்த பிறகும் சொகுசாக வாழ வேண்டும் என்ற சுயநலத்தில் தனது அதீத சக்திகளை சாதாரன மக்களுக்கு கிடைக்கச் செய்தார். இதனால் நன்மை நடக்கும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் நடந்தது என்னவோ அதற்கு முற்றிலும் நேர்மாறாகத்தான். சாதாரன மக்களுக்கு திடீரென அசாத்திய சக்திகள் கிடைக்கப்பெற்றதும் சிலகாலம் மட்டுமே அந்த நாட்டில் அமைதி நிலவியது. அதன் பிறகு மக்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சக்தியை உபயோகிக்கத் தொடங்கினர் மக்கள் அவ்வுலகின் சட்டதிட்டங்களை மீற தொடங்கினர். எதிர்த்து கேள்வி கேட்பவரை தாக்கத் துணிந்தனர்.  “உனக்கும் எனக்கும் சம பலம் இருக்கின்றது நீ யார் என்னைக் கட்டுப்படுத்த?” என்ற மனநிலை அனைத்து மனிதர்களிடமும் வந்துவிட்டது. யாரும் யாருக்கும் அடிபணிவதில்லை, அக்கிரமங்கள் அராஜ்ஜகங்கள் அதிகமாயின. மன்னர் இறந்த பிறகு ஆட்சியை கைப்பற்றிய இருபந்தைந்து வயது இளவரசனால் நாட்டை சரிவர ஆட்சி செய்யமுடியவில்லை, மக்களிடமிருந்து வரி வசூல் இல்லை, உணவு உற்பத்தி இல்லை, மக்களுக்கு அபரிமிதமான சக்திகள் வந்துவிட்டதால் அவர்கள் யாரும் உழைப்பதில்லை. மாயாஜால சக்தியில் உணவை மட்டும் உற்பத்தி செய்யமுடியாது என்ற ஒரு காரணத்தால் அவரவர் குடும்பத்திற்கு மட்டும் உணவை உற்பத்தி செய்துகொண்டனர். அதையும் சிலர் தட்டி பறிக்கச் செய்தனர்.

அமைதியின் அழகிய உருவமாக இருந்த அவ்வுலகம் இன்று கலவரபூமியாக காட்சியளித்தது. பாய்ந்தோடும் நதிகள் மாசுபட்டுக் கிடந்தன, பச்சை போர்வையை போர்த்தியபடி இருந்த மரங்கள் பொலிவிழந்து காணப்பட்டது, ஆங்காங்கே கட்டிடங்கள் எல்லாம் தீக்கிரையான சுவடுகளை தாங்கியிருந்தது. மக்களிடமிருந்து அதீத சக்திகளை திரும்பப்பெற்று இளவரசன் மட்டுமே சக்திபடைத்தவனாக மாறினால் மட்டுமே அவ்வுலகில் அமைதி திரும்புவது சாத்தியம். அதற்கான வழியை வேண்டி இறந்து போன தன் தந்தையை அழைத்துப் பேசும் முயற்சியில் இருந்தான் இளவரசன் அமடியஸ். இளவரசனின் முயற்சி வீன் போகவில்லை. சுமார் ஆறுமாத காலங்களுக்குப் பிறகு அரசர் காட்சியளித்தார்.

“தந்தையே...” என அவரைக் கட்டித்தழுவ முயற்சித்தான் அமடியஸ். ஆனால் முடியவில்லை. காற்றோடு காற்றாக இருந்தார் அவர்.

“முதலில் என்னை மன்னித்துவிடு அமடியஸ்... மரணத்தின் பிடியில் நான் செய்த மடத்தனத்தால் இன்று நம் சாம்ராஜ்ஜியமே அழிந்துகொண்டுள்ளது. இதில் இருந்து மீள ஒரே ஒரு வழி உள்ளது. நம் உலகில் எல்லையில் இருக்கும் நமது அரசகுருவான மூத்தவரை நீ சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர் சொல்லும்படி நீ நடந்துகொண்டால் இங்கு மீண்டும் அமைதி திரும்ப வாய்ப்பு கிடைக்கும். என்னால் 2 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது” சொல்லி முடித்ததும் மாயமாக மறைந்து போனார் மன்னர்.

மன்னர் அங்கிருந்து மறைந்ததும் இளவரசன் அமடியஸ் அங்கிருந்து கிளம்பி அரசகுரு இருக்கும் இடத்திற்குச் சென்றான்.  “ப்ரமோதிம்மப்ஸி” உலகமானது பூலோகத்துடன் கடல் வழியாக இணையும் இடத்தில் தான் அரசகுரு இருந்தார். அவரை அரசகுடும்பத்தினர் மட்டுமே நேருக்கு நேர் சந்திக்கமுடியும்.

“தந்தையின் சுயநலத்தினால் விளைந்த பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாயா அமடியஸ்” இளவரசனை அமைதியான பார்வையுடன் வரவேற்றார்.

“ஆமாம் குருவே அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என் சாம்ராஜ்ஜியம். இதிலிருந்து மீண்டு வர நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்”

“இந்த நாட்டை ஆளும் தகுதி உனக்கில்லை அமடியஸ்” இளவரசனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் அரசகுரு.

“என்ன சொல்கின்றீர்கள் குருவே... நான் என்ன செய்ய வேண்டும்.?” குருவின் கால்களைப் பிடித்தான் அமடியஸ்.

“நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசகுருவை கலந்துகொள்ள வேண்டும் என்பதையே உன்னால் சுயமாக யோசிக்க முடியாமல் உன் தந்தையை அழைத்து பேசுவதற்காக ஆறுமாத காலம் வீணடித்திருக்கின்றாயே உன்னை எப்படி ஒரு நாட்டின் தலைவனாக பார்க்க முடியும்?” மீண்டும் ஏளனமாக சிரித்தார்.

“மன்னிக்க வேண்டும் குருவே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் கூற வேண்டும்” குனிந்த தலை நிமிராமல் பேசினான் அமடியஸ்.

 “இந்த நாட்டிற்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது அமடியஸ். மக்களுக்கு அனைத்து சக்திகள் இருந்தாலும் அவர்களால் ஆட்சி செய்யமுடியாது. மக்களோடு மக்களாக இருந்தாலும் மக்களின் எண்ணங்களினூடே பயணித்து அவர்களை தாண்டி யோசிப்பவன் மட்டுமே தலைவனாக தகுதியுடையவன். முதலில் நீ அந்த தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீ ஒரு தனித்துவமான தலைவனாக மாறும் காலம் விரைவில் வரும். அதுவரை நீ இந்த உலகத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்”

“புரியவில்லை குருவே... சற்று புரியும்படி கூறலாமே”

 “இந்த உலகத்தை விட்டு வெளியேறி வாழும் சக்தி என்பது அரச குடும்பத்தினருக்கு மட்டுமே உறிய சக்தியாகும். உனக்கான தேர்வு இவ்வுலகிற்கு வெளியே இருக்கும் பூலோகத்தில் தான். அங்கு சென்று உனக்கு கொடுக்கப்படும் செயல்களை நீ செய்ய வேண்டும்” அமடியஸின் தலையை தடவி அவனுக்கு வழி கூறினார் அரசகுரு

உலகை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்ற தகவலை கேட்டதும் அமடியஸின் உடலில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. “இது சரியாக வருமா குருவே?” சந்தேகமாகக் கேட்டான்.

“சரியாக வரவில்லை என்றாலும் நீ இதை செய்து தான் ஆகவேண்டும். நீ இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்பதே உனக்கான விதி. பூலோகத்தில் நல்லாட்சி நடைபெறாத ஒரு நாட்டின் ஒரு பகுதிக்குச் செல்ல வேண்டும் நீ. அங்கு சாதாரண மனிதனாகவே வாழ்ந்து அந்நாட்டில் குறைந்தது 5 வருடங்கள் நல்லாட்சி நடைபெறும் சூழலை உருவாக்கிக் காட்ட வேண்டும். 5 வருடங்கள் முடியும் தருவாயில் நான் அங்கு வந்து ஆய்வு செய்து உனது வெற்றி தோல்வியை தீர்மாணிப்பேன். நீ அவ்வாறு வெற்றிபெற்றுவிட்டால் இவ்வுலகம் திரும்புகையில் உன் மக்களுக்கு உன் தந்தை கொடுத்த அனைத்து சக்திகளும் திரும்பப்பெறப்பட்டுவிடும்.

 “இதற்கு எதற்காக குருவே 5 வருடங்கள், உடனே அவ்வாறு செய்துவிடலாமே”

“அவசரப்படாதே அமடியஸ்... நீ அங்கு உன் சக்தியை உனது தேவைக்காக பயன்படுத்த முடியாது நீ உன் சக்தியை யாராவது ஒருவருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் உனது சக்தியை 5 விதமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். சக்தியை பயன்படுத்தும் போது நீ என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்த பின்னரே பயன்படுத்தலாம். அங்கு வாழும் காலங்களில் உன் தந்தையை 6 முறை அழைத்துப் பேசலாம். முதலில் நீ போகவேண்டிய நாட்டை முடிவு செய். அந்த நாட்டிலில் உனக்கான ஒருவனை தேர்வு செய். அவன் மூலம் உனக்கு கொடுக்கப்பட்ட இந்த தேர்வில் வெற்றிபெற முயற்சி செய். வெற்றியுடன் திரும்பிவா...” அரசகுரு அங்கிருந்து மறைந்தார்.

“ப்ரமோதிம்மப்ஸி” உலகை விட்டு கவலையுடன் வெளியேறினான் அமடியஸ்.

****

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் மார்கழி மாத காலம். இந்தியாவில் தமிழ்நாட்டில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள ஓர் ஊரின் உட்பகுதியில் வயல்வெளிகளைத் தாண்டி இருக்கும் ஒர் குளக்கரையின் ஒரமாக இருந்தது அந்த சிறிய ஓட்டு வீடு. வீட்டின் தின்னைப்பகுதியில் சணல் சாக்குப்பையினால் தைக்கப்பட்டிருந்த பெரிய திரை ஒன்று போடப்பட்டிருந்தது. வீட்டின் திண்ணையில் கதவு ஏதும் இல்லை. சிறு சிறு கயிறு கொண்டு இறுக்கிக் கட்டப்பட்டிருந்த சணல் சாக்கு திரை மட்டுமே வெளியில் வீசிக்கொண்டிருந்த பனிக்காற்றை வீட்டிற்குள் விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக 

TD60 கேசட் மூலம் கந்தசஷ்டி கவசத்தை பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தது ஒரு பழைய சோனி டேப்ரிக்கார்டர். டேப்ரெக்கார்டரை சிறை பிடித்து வைத்தது போல் அதன் மீது ஆங்காங்கே சிறிய நூல் கொண்டு கட்டு போடப்பட்டிருந்தது, வீட்டில் ஒரே ஒரு எலக்ட்ரிக் பல்ப் இருந்தது அந்த பல்பின் ஹோல்டரில் இருந்து ப்ளக் மூலம் டேப்ரெக்கார்டருக்கு மின்சாரம் போய்க் கொண்டிருந்தது. ஒத்த லைட்டு வீடு என்று சொல்லக்கூடிய அரசாங்கத்தின் இலவச மின்சாரத்தில் அவ்வீட்டின் பிள்ளையின் அறிவின் உதவியால் டேப்ரெக்கார்டருக்கு மின்சாரம் திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வீட்டுத் திண்ணையில் கலைஞர் படம் போட்ட காலண்டருக்கும் எம்.ஜி.ஆர் படம் போட்ட காலண்டருக்கும் நடுவில் மாட்டியிருந்த மாட்டியிருந்த கடிகாரத்தின் முட்கள் மணி 5.00 என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டின் வெளியே பணிமூட்டம் அதிகமாக இருந்தது. வாசலில் கட்டப்பட்டிருந்த சணல் திரையை லேசாக விளக்கிவிட்ட படி வீட்டின் வாசலுக்கு வந்தார் அவ்வீட்டின் பெண்மணி.

“ம்ம்மா... படுதாவ இறுக்கி கட்டியுடும்மா... குளுரு சாத்து சாத்துன்னு சாத்துது” உடலைச் சுற்றி பழைய பாலீஸ்டர் புடவையைச் சுற்றியபடி பாம்பு போல் நெளிந்துகொண்டிருந்தான் மலர்மன்னன். வயது 12.

“எலா... மலரூ... எந்தீரிடா... அப்பா கோயிலுக்கு போய்ட்டு வந்துருவாக, அதுக்குள்ள வாசகூட்டி அடுப்பு மொழுகி வைக்கனும். போய் பானு அக்கா வீட்ல பாலும் கொஞ்சம் வெள்ளக்கட்டியும் வாங்கியாந்துருப்பா..” மலர்மன்னனின் உடலைச்சுற்றியிருந்த புடவையை இழுத்துக் கொண்டே பாசமாக அவனை எழுப்பினாள் அவனின் அம்மா. சபரிமலைக்கு மாலை போட்டிருந்த தன் கணவனுக்கு அதிகாலையில் குளிருக்கு இதமாக தேனீர் வைத்துக் கொடுப்பதற்காக உறங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி காலங்காத்தாலயே பாலும் வெள்ளக்கட்டியும் கடனாக வாங்கிவர அனுப்பும் முயற்சியில் இருந்தாள் அம்மா.

“ப்போம்மா... குளூருதுல்ல எனக்கு. அங்க போனால் பானக்கா கட்டுத்தரி கூட்டி சுத்தம் பண்ண சொல்லும்... நான் போமாட்டேன் போம்மா” மீண்டும் உறங்க ஆயத்தமானான் மலர்.

 “அப்பாக்கு கொடுக்கனும்னு சொல்லிட்டு வந்துடுப்பா... அம்மா அப்பறமா வந்து கட்டுத்தரி கூட்றேன்னு சொல்லிட்டு வாங்கிட்டுவாடா தங்கம்” அம்மாவின் கெஞ்சலைத் தொடர்ந்து மெதுவாக எழுந்து கண்களைத் திறந்தான் மலர்மன்னன்.

எதிரே இருந்த எல்.ஈ.டி டிவியின் மேல் மாட்டப்பட்டிருந்த எலக்ட்ரானிக் கடிகாரத்தில் இன்றைய தேதி 03:04:2018 06.45 AM எனக் காட்டியது. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து தலையணையின் அருகில் கிடந்த ஐஃபோனை எடுத்து ஃபிங்கர் ரெக்கக்னிஷன் வைத்து ஃபோனை திறந்தான். அதில் வாட்ஸப்பில் நிறைய மெஸேஜ் நோட்டிஃபிகேசன்கள் இருந்தது. ஃபோனின் திறையில் life sucks என்ற வாசகத்துடன் ஒரு இளைஞன் புகைத்துக் கொண்டிருக்கும் படம் இருந்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் பழைய நினைவுகளுடன் கிட்டத்தட்ட 18 வருடங்கள் பின்னோக்கி பயணித்து இரண்டாயிரமாம் வருடத்தில் தான் வாழ்ந்த குளக்கரைக்கே சென்றிருந்தான் 30 வயதான இளைஞன் மலர். வாயில் சிகரெட்டைக் கவ்விக் கொண்டு கழிப்பறைக்குள் சென்றான்.

மலர் மன்னனுக்கு அப்பா அம்மா இருவருமே கிடையாது. இஞ்சினியரிங் படித்துவிட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் கஸ்டமர் சப்போர்ட் மேனேஜராக இருக்கின்றான். சம்பாதித்து சேர்த்து தன் சொந்த ஊரில் ஒரு வீடு கட்டியிருக்கின்றான். அதைத் தவிர அவனிடம் சேமிப்பு என எதுவும் இல்லை. அப்பா இறந்த பிறகு அம்மா மட்டும் தான் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களும் 3 வருடங்களுக்கு முன்னர் இறந்து போய்விட்டார்கள்.

மணி சரியாக 7.45 ஆனது. குரோம்பேட்டை ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. மெயின் ரோட்டிலிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்தாள் திவ்யா. தனது செல்ஃபோனை எடுத்து நொடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டே சற்று பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள். திவ்யா வெளிர்நிறம், ஐந்து அடி உயரம், ஒல்லியான தோற்றம், அழகான முகச்சாயல், கருஞ்சிவப்பு காட்டன் புடவை அணிந்திருந்தாள். முதுகு வரை இருக்கும் கேசம். சாலையில் செல்லும் வாகனங்களால் கிழிக்கப்படும் காற்றானது சாலை ஓரம் நின்றுகொண்டிருக்கும் அவளின் கூந்தலை முகர்ந்து சென்றுகொண்டிருந்தது. காற்றில் பறக்கும் தலைமுடியையும் தன் கைகளால் சரி செய்துகொண்டபடி நின்றிருந்தாள்.

அவளின் செல்ஃபோன் அலறியது. “ஹலோ... கிளம்பிட்டியா..? நான் இங்கதான் ஸ்டேஷன் பக்கத்துல மெயின் ரோட்ல நிக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் வரியா?” அழைத்தது மலர் மன்னன் தான். இருவரும் 4 வருடங்களாக காதலித்துக் கொண்டுள்ளனர். திவ்யா ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக இருக்கின்றாள். அடுத்த 3 நிமிடங்களின் அவளின் அருகே வந்து நின்றான் மலர். பல்சர் 220 பைக். சிவப்பு கலர். கருப்பு சட்டை நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். மலர் நல்ல உயரமானவன். முப்பது வயது இளைஞன் என சொல்ல முடியாது, வாகான உடல் தோற்றம் அழகான முகம், முகத்தில் கொஞ்சம் தாடி மீசையுடன் இருந்தான்.

“ஏறு... கிளம்பலாம்? எங்க போகட்டும்?” திவ்யாவிடம் கேட்டுக்கொண்டே ஹெல்மெட்டை தலையில் மாட்டினான்.

 “எப்பவும் போற மாதிரி செம்மொழிப் பூங்காவுக்கே பொ... உன்கிட்ட நிறைய பேசனும்” திவ்யா சொன்னதும்

“இனிமே பேச என்ன இருக்கு திவ்யா. அதான் முடிவெடுத்துட்டியே இனிமே பேசி என்ன ஆக போகுது?” கிண்டலடித்தான் மலர்.

முப்பது நிமிடங்கள் கழித்து சென்னை செம்மொழிப் பூங்கா:

பூச்செடிகளுக்கு நடுவில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான் இளவரசன் அமடியஸ், முழு சென்னைவாசியாக மாறியிருந்தான். ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், கண்களில் ரேபான் கிளாஸ் கைகளில் ஐஃபோன் என் ஒரு பணக்கார இளைஞனுக்கு உண்டாட அத்துனை விஷயங்களையும் தன்னகத்தே கொண்டு அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் கவலை நிழலாடிக் கொண்டிருந்தது. பூமிக்கு வந்து மூன்று நாட்கள் முழுமையாக முடிந்திருந்தது. இது வரை தான் பழகுவதற்கு கூட ஒருவனை கண்டறியவில்லை, குழப்பமே உருவாக அமர்ந்திருந்த அவனுக்கு எதிரில் உள்ள இருக்கையில் திவ்யாவும் மலர் மன்னனும் உட்கார்ந்தனர். திவ்யா தன் ஹேண்ட் பேக்கை மலரிடம் கொடுத்தாள்.

“இத கொஞ்சம் அப்டி பக்கத்துல வையேன்” திவ்யா சொன்னதும் அதை வாங்கி தன் அருகில் வைத்துக் கொண்டான் மலர், அவன் பதிலேதும் பேசவில்லை, அமைதியாக அமர்ந்தபடி அங்கே ஜோடி ஜோடியாக சுற்றி திரிந்துகொண்டிருக்கும் காதலர்களை பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இன்னையோட கடைசி இல்லையா” மலரின் கைகளை பிடித்துக் கொண்டு அவனது தோள்களின் தன் தலையை சாய்த்தாள் திவ்யா.

“ஆமாம் திவ்யா. உனக்கு கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும். இருந்தாலும் உன் வாழ்க்கையும் உன் அப்பா அம்மாவும் நல்லா இருக்கனும்னா நீ எடுத்த முடிவுதான் சரி திவ்யா. நீ உன் கல்யாண வேலையப் பார், நான் என் வேலைய ரிசைன் பண்ணிட்டேன். கொஞ்ச நாள் பெங்களூர்ல போய் இருக்க போறேன். அங்க செட் ஆச்சுன்னா அப்டியே அங்க ஜாப்ல ஜாய்ன் பண்ணிடுவேன். எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல திவ்யா” மலர் சொல்லி முடிக்கையில் அவனது கைகளில் முத்தம் பதித்தாள் திவ்யா. அவனது கைகளை பிடித்து தன் கண்ணத்தில் வைத்துக் கொண்டாள்.

திவ்யாவின் அனைத்து செயல்களையும் அவளையும் அங்கம் அங்கமாக ரசித்தபடி அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்தான் அமடியஸ். திவ்யாவும் மலர் மன்னனும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பேசிக் கொண்டும் அமைதியாக அமர்ந்துகொண்டும் அவ்வப்போது முத்தங்கள் பறிமாரிக் கொண்டும் இருந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பூங்காவில் அமர்ந்திருந்த அமடியஸின் அருகில் அவரின் தந்தை வந்து அமர்ந்தார். பூமிக்கு வந்ததும் முதல் முறையாக தன் தந்தையில் ஆலோசனையைக் கேட்பதற்காக அவரை அழைத்திருந்தான் அமடியஸ்.

“அமடியஸ் உனது பலவீனம் ஒன்றுதான். நீ தேடுவது உனக்கு எதிரில் இருந்தாலும் அதை உன்னால் அடையாளம் கண்டு அடைய முடியாது. இவ்வளவு நேரம் உன் எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த ஜோடியில் ஆண்மகனான மலர் மன்னன் தான் பூலோகத்தில் உன்னோடு இணைந்து பயணிக்கக் கூடியவன். அவன் இன்னும் 3 மணி நேரத்தில் இறந்துவிடப் போகின்றான். உன்னால் முடிந்தால் அவனை மரணத்திலிருந்து காத்து உனது தேவைக்கு பயன்படுத்திக்கொள்” மறைந்துவிட்டார் மன்னர்.

மன்னர் மறைந்ததும் தன் கண்களை மூடி மலர் மன்னன் செல்லுமிடங்களை கண்கானிக்கத் தொடங்கினான் அமடியஸ்.

தொடரும்...